ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!

சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Image Credit : News7


இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. 

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர் அஜிங்கியா ரகானே 5 ரன்களுடன் வெளியேறினார். 

விராட் கோலி, மணிஷ் பாண்டே ஆகியோர் ரன் எடுக்காமலேயே ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த கேதார் ஜாதவ் சரிவைத் தடுத்து நிறுத்தி ஓரளவுக்கு ரன்களைச் சேர்த்தார். 

ரோகித் சர்மா 28 ரன்கள் எடுத்த நிலையிலும், கேதார் ஜாதவ் 40ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். 22 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்து தடுமாறியது. 

அதன் பின் மகேந்திர சிங் தோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சரிவைத் தடுத்து நிறுத்தினர். தோனி 79ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்டியா 83 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. 

மழையால் ஆஸ்திரேலிய அணியினர் விளையாடுவது தாமதமானதால் ஓவர்களும் வெற்றி இலக்குக்கான ரன்களும் குறைக்கப்பட்டன. 

21 ஓவர்களில் 164 ரன்கள் எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, விளையாடிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 39 ரன்களும், ஃபால்க்னர் 32 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் ஹர்திக் பாண்டியா, குல்திப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

83 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் எடுத்த ஹர்திக் பாண்டியாவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Comments