அச்சம் தவிர் டீமை அள்ளிப் போட்ட பிக் பாஸ்...சர்ச்சைக்காக சேர்க்கப்பட்டாரா பரணி!

சென்னை : விஜய் டிவியின் அச்சம் தவிர் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய பரணியை பிக் பாஸ் நிகழ்ச்சியிலம் விஜய் டிவி சேர்த்திருப்பது சர்ச்சை மூலம் விளம்பரம் தேடுவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது. மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்ட விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி சுமார் இரண்டரை மணி நேரம் ஒரு திரைப்படம் போல போட்டியாளர்கள் அறிவிப்பு மட்டுமே நடந்து முடிந்துள்ளது. நடிகை அமலாபால், ராய்லட்சுமி, அரசியல் கட்சியை சேர்ந்த நாஞ்சில் சம்பத், எச்.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள் என்று தகவல்கள் பரவிய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 15 போட்டியாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இந்த போட்டியாளர்களில் விஜய் டிவியில் கடந்த ஜுன் மாதம் நடத்தப்பட்ட அதிரடியான விளையாட்டு நிகழ்ச்சி அச்சம் தவிரில் பங்கேற்றவர்களையும் சேர்த்துள்ளது விஜய் டிவி. அதிலும் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர் அவர்களுக்கு கடினமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு அவர்களின் திறமைகள் சோதிக்கப்பட்டன.





கணவன், மனைவி : எமோஷனல் அச்சம் தவிர் போட்டியில் இரண்டு குழுக்களாக பிரிந்து போட்டி நடத்தப்பட்டது. இதில் ஒரு அணியைத் தலைமை தாங்கியவர் கணேஷ் வெங்கட்ராமன். கணேஷ் வெங்கட்ராமன் திருமணமான கொஞ்ச நாளிலேயே அதி பயங்கர போட்டிகளில் பங்கேற்றதாக பில்ட் அப் கொடுக்கப்பட்டது. அதே போன்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதும் கணேஷ் வெங்கட்ராமன் திருமணம் ஆன ஒன்றரை ஆண்டிலேயே மனைவியைப் பிரிந்து எந்தத் தொடர்பும் இல்லாமல் 100 நாட்கள் இருக்கப் போகிறார் என்று பில்ட் அப் கூட்டப்பட்டது.



சோகத்தில் நிஷா : அதோடு நின்றுவிடாமல் கணேஷின் மனைவியும் பிரபல தொகுப்பாளியுமான நிஷாவை மேடைக்கு அழைத்து அதே டெம்ப்பை மெயின்டெயின் செய்தார்கள். நிஷா கணவரைப் பிரிந்து இருக்கப் போவதை நினைத்து ஒரு வாரமாக அழுதுகொண்டிருப்பதாகக் கூறி எமோஷன் சீன் கிரியேட் செய்தார்.

சர்ச்சை நாயகன் : இது இப்படி என்றால் அச்சம் தவிர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடிலும் என்னை ஏமாற்றுகிறீர்கள், நான் சரியாகத் தான் விளையாடினேன் என்று தர்க்கம் செய்த நடிகர் பரணியையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்துள்ளனர். சில நேரங்களில் டீம் மேட்களுடன் சேர்ந்து விளையாடினாலும் பல நேரங்களில் கெட்ட வார்த்தைகளில் திட்டியும், எதிர் அணியை கடுமையாக விமர்சித்தும் வந்தவர் பரணி.



டிஆர்பி ஏறுமா? :  எமோஷனல், சர்ச்சை, விமர்சனங்களைக் கொண்டே காலத்தை ஓட்டும் விஜய் டிவியின் டிஆர்பி அண்மைக் காலமாக குறைந்து விட்டது. இதனை கூட்டுவதற்கு கைகொடுக்கும் என்பதற்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கொண்டுவரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள மக்களிடையே இருக்கும் ஆர்வத்தை தெரிந்து காசு சம்பாதிக்க களம் குதித்துள்ள விஜய் டிவியின் பிக் பாஸ் போட்டியாளர்கள் தேர்வில் பரணி இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

Comments