விவசாயிகள் தற்கொலையை தடுப்பதுதான் உங்கள் வேலை.. தமிழக அரசை வறுத்தெடுத்த சுப்ரீம் கோர்ட்

டெல்லி: விவசாயிகள் தற்கொலையை தடுப்பதுதான் உங்கள் வேலையே தவிர நிவாரணம் வழங்குவதல்ல என்று தமிழக அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா), ஏஎம் கான்வில்க்கர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 தமிழகத்தில் நடந்த விவசாயிகள் தற்கொலை தொடர்பாக, தமிழ்நாடு பொதுநல வழக்குக்கான மையம் சார்பில் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கை ஹைகோர்ட்டு தள்ளுபடி செய்த நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்குதான் விசாரணைக்கு வந்தது.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பாக ஆஜரான வக்கீல் என்.ராஜாராமன், கூறுகையில், விவசாயக் கடன்களை கட்டத் தவறும்போது வங்கிகள் எடுக்கும் வலுக்கட்டாய நடவடிக்கைகள், விவசாயிகளின் கண்ணியத்தை குலைப்பதே தற்கொலைகளுக்கு காரணம் என்று குறிப்பிட்டார்.

supreme court comes down heavily on tamil nadu govt on farmers suicides


விவசாயிகளுக்கு அவமானம் 


தமிழக அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் நரசிம்மா, தமிழக அரசு வக்கீல் பி.பாலாஜி, இந்த வழக்கில் கோர்ட்டுக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள சங்கரநாராயணன் ஆகியோர் ஆஜராகினர். கனமழை போன்றவற்றால் மகசூல் பாதிக்கப்படும்போது, விவசாயியின் டிராக்டரை வங்கி பறித்துச் செல்லுமானால் அதுவும் வலுக்கட்டாய நடவடிக்கைதான் என்று வழக்கின் நீதிமன்ற ஆலோசகர் கோபால் சங்கரநாராயணன் கூறினார்.




நேரடி விற்பனை உதவும்

இப்படி வலுக்கட்டாய நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் அரசு நிர்வாகத்தை அணுக என்ன வழிமுறை இருக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்படி இருந்தால் அதை விவசாயிகள் அறியுமாறு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் வலியுறுத்தினர். விவசாயிகள் விளைபொருளை நேரடியாக விற்பனை செய்ய அரசு உதவுவதும் இடைத்தரகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

கடும் சீற்றம் 


விவசாயிகள் தற்கொலை நிகழாமல் தடுப்பதுதான் அரசின் வேலையே தவிர, தற்கொலை செய்துகொண்ட பிறகு நிவாரண உதவிகள் வழங்குவது அல்ல என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். விவசாயிகள் தற்கொலைகள் நிகழ்வதற்கான அடிப்படை காரணத்தை கண்டறிந்து அதை களைவதுதான் அரசின் உண்மையான பணி என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.




அரசு தலையிட வேண்டும் 

விவசாயிகளிடமிருந்து கடனை வசூலிப்பதற்காக வங்கிகள் வலுக்கட்டாய நடவடிக்கைகள் எடுக்கும்போது, அதில் அரசு தலையிட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சங்கரநாராயணன் தாக்கல் செய்த அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்று உத்தரவிட்டனர்.


Comments